
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திலிருந்து செம்பட்டி நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த கார் கன்னிவாடி அடுத்த பண்ணப்பட்டி என்ற இடத்தில், பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பெண்ணும், ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், காரின் டயர் வெடித்ததால் விபத்து நடந்துள்ளதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.