மாணவி பிரியா மரண வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 2 மருத்துவர்கள் மனுத் தாக்கல்

மாணவி பிரியா மரண வழக்கில் முன்ஜாமீன் கேட்டு 2 மருத்துவர்கள் மனுத் தாக்கல்

தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், இரு மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கால் முட்டியில் ஏற்பட்ட ஜவ்வு கிழிவு காரணமாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா, பெரியார்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. இதன் பின்னர் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

பெரியார்நகர் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 15-ம் தேதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், இது போன்று பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தாங்கள் அறுவை சிகிச்சை செய்த பலர் இன்று நல்ல நிலையில் உள்ளதாகவும், மாணவி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளதால் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் எனவும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் இருவரும் மனுவில் உறுதி அளித்துள்ளனர். இந்த மனு இன்று நீதிபதி ஜெததீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in