வாரத்தில் 2 நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தலாம், ஆனால்..!- உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாரத்தில் 2 நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தலாம், ஆனால்..!- உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாரத்தில் 2 நாட்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தலாம் என்றும் காலை 8 மணிக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு மீனவர்கள் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக் கொள்வதால் சுருக்குமடி வலையைக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்குமடி வலைங்களை கொண்டு மீன்பிடிக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறி 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் சுருக்கும்மடி வலையைக் கொண்டு மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும் மீன் பிடிக்கும் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஞானசேகரம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்குமடி வலைக்கு தடை விதித்துள்ளது என்பது சட்ட விரோதம். குறிப்பாக கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன்பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன்பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதாகும் அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் இதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது எனவும் இதனால் சுருக்கும்மடி வலைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுருக்குமடி வலை என்பது ஒரு ஹெக்டேர் அளவு கொண்டது. 3 கால்பந்தாட்ட மைதானத்துக்கு சமமானது. இதை அனுமதித்தால் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே இரண்டு தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. சுருக்குமடி வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இடம்பெற்றிருந்தும், கருத்தை கேட்காமலும், ஒப்புதல் இல்லாமலும் நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘சுருக்குமடி வலையை பொருத்தமட்டில் மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதிக்கின்றன என்பது தெரியவில்லை. இருப்பினும் தமிழகத்தில் கடல் வளம் மற்றும் லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது‘ என தெரிவித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை மீனவர்கள் எடுத்துச் செல்லலாம். வாரத்தில் திங்கள், வியாழன் என இரண்டு நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்கும்மடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். காலை 8 மணிக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு மீனவர்கள் திரும்ப வேண்டும். படகுகளை கண்காணிக்க டிராக்கிங் கருவியை பொருத்த வேண்டும்" என கூறியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in