வாகனத்தணிக்கையில் கட்டுக்கட்டாக சிக்கிய 2 கோடி: ஹவாலா பணமா என ஆந்திர நகை வியாபாரிகளிடம் விசாரணை

வாகனத்தணிக்கையில் கட்டுக்கட்டாக சிக்கிய 2 கோடி: ஹவாலா பணமா என ஆந்திர நகை வியாபாரிகளிடம் விசாரணை

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு் தகவல் கிடைத்தது. இதன்பேரில் துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான தனிப்படையினர் வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி தம்புசெட்டித் தெரு பகுதியில் இன்று மதியம் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை மடக்கிச் சோதனை மேற்கொண்டனர். அதில் காரின் பின்புறம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், காரில் பணத்துடன் வந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் நாராயணன் என்பதும், 2 கோடி ரூபாயை உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவில் மொத்த நகை வியாபாரம் செய்து வருவதாகவும், சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இது ஹவாலா பணமாக இருக்குமா என்கிற கோணத்தில் போலீஸார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பணம், பிடிபட்ட இருவரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in