
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஒரே வாரத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இறந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மூன்றாவது நபர் அவர்களில் ஒருவரின் மனைவி ஆவார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) பணியில் இருந்த 2 போலீசார் உள்பட 3 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை செய்துகொண்டனர். முதல் சம்பவம் கடந்த ஜனவரி 10 அன்று நடந்தது, 29 வயதான சிந்தாமணி என்ற காவலர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிந்தாமணி பிசிஎம்சி ரேடார் மையத்தில் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் கடந்த திங்கள்கிழமை இரவு, சிஐஎஸ்எஃப் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் 30 வயதான விகாஸ் சிங், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு மையத்தில் பணியில் இருந்தபோது தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்தார். அதே நேரத்தில் மற்றொரு சோகமாக, விகாஸ் சிங்கின் மனைவி பிரியா சிங் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஒரே வாரத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் இஸ்ரோவில் பணியாற்றுவோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.