பிணவறையிலிருந்த 2 சடலங்களின் கண்களை எலிகள் தின்றுவிட்டது: மருத்துவமனையின் அதிர்ச்சி விளக்கம்

பிணவறையிலிருந்த 2 சடலங்களின் கண்களை எலிகள் தின்றுவிட்டது: மருத்துவமனையின் அதிர்ச்சி விளக்கம்

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட மருத்துவமனையில் உள்ள பிணவறையில் 15 நாட்களுக்குள் மருத்துவ அலட்சியத்தால் இரண்டு சடலங்களில் இருந்து தலா ஒரு கண் மர்மமான முறையில் காணாமல் போனது. இறந்த உடல்களின் கண்களை எலிகள் கடித்துள்ளன என மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சாகர் மாவட்ட மருத்துவமனையில் 32 வயதான மோதிலால் கவுண்ட், அமேட் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் மயங்கி விழுந்ததால், அவரது குடும்ப உறுப்பினர்களால் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் சிகிச்சையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதி பிரேத பரிசோதனைக்காக அவரின் சடலத்தைப் பார்த்தபோது, ஒரு கண்ணை காணவில்லை. அப்போது, டீப் ஃப்ரீசர் பழுதானதால், பிணவறையில் உள்ள திறந்தவெளி மேஜையில் சடலம் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

25 வயதான ரமேஷ் அஹிவார் ஜனவரி 16 அன்று மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறுநாள் இரவு அவர் இறந்தார். இந்த நிலையில், ஜனவரி 19ம் தேதி, டீப் ஃப்ரீசரில் இருந்து சடலத்தை வெளியே எடுத்தபோது, அவரின் ஒரு கண்ணை காணவில்லை. இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் அபிஷேக் தாக்குர் கூறியதாவது: இறந்தவரின் உடல், பிணவறையில் உள்ள ஃப்ரீசரில் வைக்கப்பட்டு, வழக்கம் போல் இயங்கி வந்தது. முதற்கட்ட விசாரணையில், இறந்தவரின் கண்ணை எலிகள் கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பிணவறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரிவான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் மம்தா திமோரி, சிவில் சர்ஜன் டாக்டர் ஜோதி சவுகான் உட்பட நான்கு மருத்துவ அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in