
சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்க்கான பட்டாவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள மாயாஜாலில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள 2 ஏக்கர் அளவிலான இடம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்குச் சொந்தமான இந்த நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விண்ணப்பித்து அது நிலுவையில் இருந்தது. பின்னர், இந்த தகவலை மறைத்து 2 ஏக்கர் இடத்திற்கு பட்டா கேட்டு காஞ்சிபுரம் தாசில்தாரருக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாயாஜால் பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டு ஏக்கர் நிலத்துக்கு பட்டா வழங்க கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் தாசில்தார் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா மற்றும் குமரேஷ் பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குறிப்பிட்ட நிலம் தொடர்பான பல உண்மை தகவல்களை தனி நீதிபதி முன்பு மறைத்து பட்டா பெற்றுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அருண் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மாயாஜாலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.