சினிமாவை விஞ்சும் செட்டிங்; 100க்கும் அதிகமான மலர்கள்: மக்களை கவர்ந்த காரைக்கால் கண்காட்சி

சினிமாவை விஞ்சும் செட்டிங்; 100க்கும் அதிகமான மலர்கள்: மக்களை கவர்ந்த காரைக்கால் கண்காட்சி

காரைக்காலில் மாவட்ட வேளாண்துறை சார்பில் 19-வது ஆண்டாக நடைபெறும் மலர் கண்காட்சி காரைக்கால் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 

பொதுவாக மலர் கண்காட்சி என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் மட்டுமே பார்க்க இயலும். ஆனால் கடந்த 15-ம் தேதி தொடங்கி நாளை 18-ம் தேதிவரை பொதுமக்களின் பார்வைக்காக காரைக்காலில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. காரைக்காலில் கார்னிவல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருவதை முன்னிட்டு  அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில வேளாண் துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 

காரைக்காலில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சினிமாக்களை விஞ்சும் அளவிற்கு செட்டிங் போடப்பட்டு மலர்களாலேயே பல வண்ணங்களை உருவாக்கியுள்ளனர்.  பழங்களை கொண்டும் வண்ணங்கள் அழகாக  உருவாக்கப்பட்டுள்ளது.  மேலும் விவசாயம் சம்பந்தப்பட்டவற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மாடி தோட்டம் அமைப்பு, சோளம் பயிரிடுதல் மாதிரி அமைப்பு ஆகியவையும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காணக் கிடைக்காத  பல அரிய பூக்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். மேலும் இங்கு செல்ஃபி பாயின்ட் உருவாக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களில் செல்ஃபி எடுத்து செல்கின்றனர். இந்த மலர்கண்காட்சியை உருவாக்க வேளாண்துறையினர் 10 நாட்களாக இரவு பகலாக பணியாற்றி உள்ளனர்.  

19-வது ஆண்டாக நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சி முன் எப்போதும் இல்லாதபடி மிகமிகச் சிறப்பாக இருப்பதாக கண்காட்சிக்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in