துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 98.03 லட்சம் மதிப்பிலான 1911 கிராம் சுத்தத் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுத் தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’ துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துபாயில் இருந்து சென்னை வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதன்படி, துபாயில் இருந்து இன்று சென்னை வந்த சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் தனது உடலில் மறைத்து எடுத்துவந்த ரூ.98.03 லட்சம் மதிப்புள்ள 1.91 கிலோ 24 கேரட் சுத்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.