ஒன்றிரண்டல்ல 19 பெண்களை ஏமாற்றி திருமணம் - 80 பவுன் நகைகள் சுருட்டல்: சிக்கினார் பரமக்குடி வாலிபர்!

ஒன்றிரண்டல்ல 19 பெண்களை ஏமாற்றி  திருமணம் - 80 பவுன் நகைகள் சுருட்டல்: சிக்கினார் பரமக்குடி வாலிபர்!

19 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு 80 பவுன் நகைகளை அபகரித்து சொகுசாக வாழ்ந்த பரமக்குடியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர்மீது சாத்தூர், மதுரை, கோவை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ஜான்சி ராணி (20). ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (26). இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. கார்த்திக்ராஜா, பரமக்குடி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் தம்பதியர் வல்லம்பட்டியில் குடியேறினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், ஜான்சிராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை கார்த்திக் ராஜா வாங்கிக்கொண்டு வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதையடுத்து அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால் ஜான்சிராணி கலக்கமடைந்தார்.

காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜான்சிராணி புகாரளித்தார். இதனடிப்டையில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குபதிந்து தீவிரமாக அவரை தேடி வந்தனர். இந்த சூழலில், திருவண்ணாமலையில் கார்த்திக் ராஜா பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த தனிப்படையினர் கார்த்திக்ராஜாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கார்த்திக்ராஜா இதுவரை 19 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், திருமணமான சில நாட்கள் மட்டும் அவர்களுடன் ஒன்றாக இருந்துவிட்டு, அதன்பின் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டும் எனக் கூறி நகைகளை அபகரித்து டிப்டாப் உடை அணிந்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது தெரிந்தது.

இவர் திருமணம் செய்து ஏமாற்றிய 19 பெண்களிடம் இருந்து 80 பவுன் நகைகளை பறித்து சென்றதும் தெரிந்தது. திருமணம் செய்து ஏமாற்றியதாக இவர் மீது சாத்தூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களின் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜான்சிராணியிடம் அபகரித்த 5 பவுன் நகையை அவரிடமிருந்து போலீஸார் மீட்டனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in