இந்திய-சீன எல்லையில் காணாமல் போன 19 பேர்: தேடுதல் பணிகள் தீவிரம்!

இந்திய-சீன எல்லையில் காணாமல் போன 19 பேர்: தேடுதல் பணிகள் தீவிரம்!

அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர குருங் குமே மாவட்டத்தில், சீனாவின் எல்லைக்கு (எல்ஏசி) அருகே டாமின் எனும் இடத்தில் உள்ள சாலை கட்டுமானப் பகுதியில் இருந்து காணாமல் போன 19 தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜூலை 5-ம் தேதி டாமின் வட்டத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) சாலை கட்டுமான பணிகள் தளத்தில் உள்ள தொழிலாளர் முகாம்களில் இருந்து அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட அசாமில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்ல தொழிலாளர்கள் விடுப்பு கேட்டதாகவும் இதற்கு ஒப்பந்தக்காரர் அவர்களுக்கு விடுப்பு தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர் புகார் அளித்தார்.

டாமின் வட்டத்தில் உள்ள இந்த சாலை கட்டுமானப் பகுதி மாநிலத் தலைநகர் இட்டாநகரில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நிலையில் குமேய் ஆற்றில் கூலித் தொழிலாளி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய குருங் குமே மாவட்டத்தின் துணை ஆணையர் நைகி பெங்கியா, "கடந்த வாரம் பதிவான புகாரின்படி, கட்டுமான தளத்தில் இருந்து தப்பி ஓடிய 19 கட்டுமானத் தொழிலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆற்றில் காணப்பட்ட ஒரு சடலத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை மூத்த அதிகாரிகளும், காவல்துறையினரும் சரிபார்த்து வருகின்றனர். இந்தப் பகுதி மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளுடன் மிகவும் தொலைவில் உள்ளது. எனவே எங்களின் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சீன எல்லைக்கு அருகே கட்டப்பட்டு வரும் சாலையானது டாமின் வட்டத்தில் இருந்து தொலைதூர எல்லைக் கிராமங்களுக்குச் செல்லும் எல்லைச் சாலையாகும்" என்று தெரிவித்தார்

குருங் குமே மாவட்ட தலைநகரான கொலோரியாங்கில் இருந்து டாமின் 130 கிமீ தொலைவில் உள்ளது. 19 தொழிலாளர்கள் காணாமல் போன கட்டுமான தளம் டாமினில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. சீனாவுடனான எல்லைப்பகுதியானது, அந்த பகுதியில் உள்ள கடைசி நிர்வாக வட்டமான டாமினில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது.

19 தொழிலாளர்கள் காணமல் போன விவகாரத்தில், அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்ததாகக் கூறப்படும் அசாமின் லக்கிம்பூரைச் சேர்ந்த துணை ஒப்பந்ததாரர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இந்த 19 தொழிலாளர்களும் அசாமின் கோக்ரஜார் மற்றும் துப்ரியின் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in