
ஆசிரியர் மனசு திட்டத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் கடிதத்தை உடனடியாக பரிசீலித்து 182 பள்ளிகள் பயனடையும் வகையில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனுக்காக பலவித திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மாவட்டந்தோறும் முன்னறிவிப்பின்றி சென்று பள்ளிகளைப் பார்வையிட்டு அங்கு உள்ள உண்மைச்சூழலைப் புரிந்து கொண்டு பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தேவையான உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்கின்றார். ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சி மூலம் ஆசிரியர்களையும், பள்ளிகளில் நேரடியாக மாணவர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னைச் சந்தித்து கோரிக்கைகளைக் கொடுக்க நினைக்கும் ஆசிரியர்கள் யாரும் தனக்கான காத்திருக்க வேண்டாம் என்பதற்காக ஆசிரியர் மனசுப் பெட்டியை அலுவலகத்திலும், இல்லத்திலும் வைத்த கையோடு, aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்ற இரண்டு மின்னஞ்சல் முகவரிகள் வழியாக கோரிக்கைகளை அனுப்பச் சொல்லி அத்தனையும் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அப்படி ஆசிரியர் மனசு மின்னஞ்சலுக்கு வந்த கோரிக்கைகளான ஆசிரியர்கள் வாரம் ஒருமுறை பாடக்குறிப்பு எழுதினால் போதும், தமிழ்த் திறனாய்வு தேர்வை தள்ளி வைக்க வேண்டும், சென்ற ஆட்சியில் நிறுத்தப்பட்ட பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து அதற்கான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்தார்.
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில் சிலர் மின் பாடப்பொருள் தயாரிப்பு, எண்ணும் எழுத்தும், மொழிபெயர்ப்பு, இல்லம் தேடிக் கல்வி கட்டகங்கள் தயாரிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மாற்றுப் பணியில் பணியில் இருந்து வருகின்றனர். அப்படி மாற்றுப்பணியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலர் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களாக இருப்பதால் அவர்கள் நடத்தும் பாடத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் மனசு பிரிவிற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
மாணவர்கள் நலன் சார்ந்த இந்த தகவல் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அவரது உத்தரவின் பேரில் மாற்றுப் பணியில் பணியாற்றும் 182 ஆசிரியர்களுக்குப் பதிலாக, இடைப்பட்ட காலத்தை ஈடுசெய்யும் வகையில் மூன்று மாத காலத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக 182 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இப்படி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.