
கடந்த ஆண்டு சீசனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தொடங்கிய ஆமைகள் முட்டையிடும் சீசனின் முதல் நாளில், ஒடிசாவின் ருஷிகுல்யா ஆற்றின் முகத்துவாரம் அருகே கடற்கரையில் 1.8 லட்சத்துக்கும் அதிகமான ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் ஒடிசாவில் போசம்பேட்டா முதல் படேஷ்வர் வரையிலான நான்கு கிலோமீட்டர் கடற்கரையில் வியாழன் இரவு தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை வரை இடைவேளையின்றி தொடர்ந்து முட்டையிட்டதாக பெர்ஹாம்பூர் கோட்ட வன அதிகாரி அம்லன் நாயக் தெரிவித்தார். இந்த ஆமைகள் முட்டையிடுதல் இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளது என்றார்.
கடந்த ஆண்டு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4 வரை 5.5 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒடிசா கடற்கரையில் முட்டையிட்டது சாதனையாக இருந்தது. "இந்த ஆண்டு ஆமைகள் முன்கூட்டியே கூடு கட்டியதற்கான காரணத்தை எங்களால் சொல்ல முடியாது. இது இயற்கையான நிகழ்வு" என்று அம்லன் நாயக் கூறினார்.
வனவிலங்கு வல்லுநர்கள், தகுந்த தட்பவெப்ப நிலைகள் மற்றும் சுத்தமான கடற்கரைகள் இப்பகுதியில் அதிகளவிலான ஆமைகள் முட்டையிடுவதற்கான காரணங்களாகக் கூறுகின்றனர். இது தொடர்பாக பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் அஞ்சன் ப்ருஸ்டி கூறுகையில், ‘இந்த ஆண்டு ஆமைகள் முன்கூட்டியே கூடு கட்டுவதற்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம்’ என தெரிவித்தார்
வன அதிகாரி அம்லன் நாயக், " முன்பே வனத்துறையினர் கடற்கரையை சுத்தம் செய்துவிட்டனர். நாங்கள் கடற்கரையை 50 பிரிவுகளாகப் பிரித்து, 200 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை முட்டைகளைப் பாதுகாக்கச் செய்துள்ளோம். காட்டு நாய்கள், குள்ளநரிகள் மற்றும் பிற வேட்டையாடுபவர்கள் நுழைவதைத் தடுக்க முழு தளமும் வேலி அமைக்கப்பட்டது" என்று கூறினார்
இதற்கிடையில், இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறியிட்ட குறைந்தது 17 பெண் ஆமைகளை இந்த முறை கண்டறிந்துள்ளனர். "குறியிடப்பட்ட ஆமைகளைக் கண்டறிதல் மற்றும் ஆமைகளைக் குறிக்கும் செயல்முறை நடந்து வருகிறது" என்று கோபால்பூரில் உள்ள ZSI பிராந்திய மையத்தின் மூத்த விஞ்ஞானியும், எஸ்டுவாரைன் உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் பொறுப்பாளருமான அனில் மொஹபத்ரா கூறினார்.