வளைகுடா போரில் 1.70 லட்சம் பேரை மீட்டோம்: அரசுக்கு நினைவூட்டிய யஷ்வந்த் சின்ஹா

யஷ்வந்த் சின்ஹா
யஷ்வந்த் சின்ஹா

ரஷ்யாவின் இடைவிடாத தாக்குதலுக்கு நடுவே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது மத்திய அரசுக்கு சவாலான காரியமாகவே இருக்கிறது. இதுவரை 8,000 இந்தியர்கள் உக்ரைனைவிட்டு வெளியேறிவிட்டாலும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வான்வழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே வெளியேற இந்தியர்கள் முயற்சி செய்துவருகின்றனர். எனினும் போலந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கடக்க முடியாத அளவுக்கு இந்திய மாணவர்கள் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். அவர்களைத் தாக்குவது, துன்புறுத்துவது என உக்ரைன் காவலர்கள் நடந்துகொள்வதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதுதொடர்பாக, இந்திய மாணவர்கள் அனுப்பிய காணொலிகளை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ட்விட்டரில் பகிர்ந்து, உடனடியாக அவர்களை மீட்குமாறு மத்திய அரசை வலியுறுத்திவருகின்றனர்.

‘ஆபரேஷன் கங்கா’ எனும் பெயரில் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டிருக்கிறது. இதன் பணிகளை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, நான்கு அமைச்சர்களைத் தனது சிறப்புத் தூதர்களாக நியமித்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்திருக்கிறார்.

இந்நிலையில், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிப்பவருமான யஷ்வந்த் சின்ஹா, இதுபோன்ற சூழலில் இந்தியர்களை மீட்பதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என மத்திய அரசுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்.

“தற்போது ஏறத்தாழ 18,000 பேர்தான் உக்ரைனில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் விமானம் மூலம் இந்தியாவால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிதல்ல. வளைகுடாப் போரின்போது, 1990 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 1.70 லட்சம் இந்தியர்கள் குவைத்திலிருந்து மீட்கப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ராலின் மேற்பார்வையில் மொத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கும் யஷ்வந்த் சின்ஹா, இந்த மீட்புப் பணிகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டி வாக்குசேகரிப்பது குறித்தும் மோடியை விமர்சித்தார்.

“உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், மீட்புப் பணிகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதாகப் பிரச்சாரம் செய்வது துயரத்தின் உச்சம். உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் இதைப் பற்றி பிரதமர் பேசிவருவது நல்ல விஷயம் அல்ல. இது அரசு செய்ய வேண்டிய கடமைதான்” என்றும் அவர் கூறினார். நெருக்கடி வரும் என்று தெரிந்திருந்தும், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பதில் அரசு ஏன் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கும் யஷ்வந்த் சின்ஹா, வான்வெளி திறந்திருந்த சமயத்திலேயே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை உரிய நேரத்தில் மீட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “வான்வெளி மூடப்பட்டதையடுத்து, பேருந்து அல்லது வேறு ஏதேனும் வாகனங்களைப் பயன்படுத்தி இந்திய மாணவர்களை மீட்க உக்ரைனில் உள்ள நமது தூதரகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்” என்றும் யஷ்வந்த் சின்ஹா சுட்டிக்காட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in