குமுளி சோதனை சாவடியில் சிக்கிய 17 டன் ரேஷன் அரிசி: கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது

ரேஷன் அரிசி மூடைகளுடன் பிடிபட்ட லாரி
ரேஷன் அரிசி மூடைகளுடன் பிடிபட்ட லாரி

கேரளாவுக்கு லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸார் குமுளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியை கடக்க முயன்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தலா 50 கிலோ வீதம் 340 மூடைகளில் 17 டன் ரேஷன் அரிசி இருந்தது.

லாரியுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீஸார் உத்தமபாளையம் போலீஸ் டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணையில், மதுரை தெற்கு வெளி வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (54), கேரள மாநிலம் பாலக்காடு வாளையார் வீதியைச் சேர்ந்த ஜான் பாஷா (38) ஆகியோர் என தெரியவந்தது.

பறிமுதல் செய்த 17 டன் ரேஷன் அரிசியை உத்தமபாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப குடோனில் ஒப்படைக்கப்பட்டது. அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக பாலா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in