விமானப் பயணங்களின் போது விதிகளை மீறியது முதல் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டது வரை, வரம்பு மீறிய 166 பேருக்கு விமானங்களில் பறக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடைவிதித்துள்ளது.
விமானங்களில் பறப்பவர்களில் பெருந்தனக்காரர்கள் மற்றும் மெத்தப் படித்து பொறுப்பான பதவில் இருப்பவர்களே அதிகம். இந்த பெரிய மனிதர்கள் மத்தியிலிருந்து சிறுமை மிகுந்த செயல்பாடுகள், விமானப் பயணங்களில் வெளிப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக விமானப் பயணங்களின்போது, பயணிகள் மத்தியிலான அநாகரிக செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் பெருகி வருகின்றன.
சக பயணி மீது சிறுநீர் கழிப்பது, போதையில் விமானத்தின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் ரகளை செய்வது, பாலியல் சில்மிஷ நடவடிக்கைகளில் ஈடுபடுவது, விமான ஊழியர்களின் அறிவுறுத்தலை செவிமெடுக்காதது, எமர்ஜென்சி தேவைக்கான அவசர திறப்பினை ஆகாயத்தில் திறக்க முயற்சிப்பது என ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு விமானப் பயணிகள் ஆளாகி வருகின்றனர்.
விமானத்தின் பைலட் மற்றும் சிப்பந்திகளுக்கு இம்மாதிரியான பயணிகள் பெரும் தலைவலியாகவும் மாறி வருகின்றனர். கூடுதல் கவனக் குவிப்பு தேவைப்படும் ஆகாயப் பயணத்தில், இம்மாதிரியான பயணிகளால் பைலட்கள் அமைதி இழக்கின்றனர். விமானம் தரையிறங்கியதும் இந்த அடங்காத பயணிகளை காவல்துறை வசம் ஒப்படைத்தாலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எளிதில் வெளிவந்து விடுகின்றனர்.
எனவே, இம்மாதிரி அடங்காத பயணிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு எந்த விமானத்திலும் ஏறுவதற்கு தடை விதிக்கும் நடைமுறையை கடுமையாக பின்பற்ற முடிவானது. இந்த வகையில், 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 166 பயணிகள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் ’பறத்தல் தடை பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்கு விமானத்தில் ‘பறக்கத் தடை’ விதிப்பதன் மூலமாக, பயணிகள் மத்தியில் விமானப் பயணத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றுவது அதிகரிக்கவும் வாய்ப்பாகும்.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.