தொடர் போராட்டம் எதிரொலி: திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை

சிறப்பு முகாமில் உள்ளவர்கள்
சிறப்பு முகாமில் உள்ளவர்கள்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து முதல்கட்டமாக அவர்களில் 16 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் செயல்பட்டுவரும் சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு வழக்குகளில தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேரும் இந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம், தீக்குளிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் சிறைச்சாலை அருகில் போராட்டம் நடத்தியிருக்கின்றன. சீமான், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் உள்ளவர்களில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லாத 16 பேரை முதல்கட்டமாக விடுவித்து இன்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பரிந்துரையின் பேரில் சுதர்சன், பிரான்சிஸ் சேவியர், குமார், மகேந்திரன், நிரூபன், நகுலேஷ், சிவசங்கர், பிரேம்குமார், டேவிட், தேவராஜ், திலீபன், கிருபராஜா, எப்சிபன், சவுந்தராஜன் உள்ளிட்ட 16 பேர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிறப்பு முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் மீதமுள்ளவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை விரைவில் முடித்து, முகாமில் இருந்த நாட்களை தண்டனை நாட்களாக கருதி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in