15 நாட்களாக 16 பேரை அறையில் பூட்டி வைத்து அடித்து சித்ரவதை: பாஜக பிரமுகரின் செயலால் போலீஸார் அதிர்ச்சி

15 நாட்களாக 16 பேரை அறையில் பூட்டி வைத்து அடித்து  சித்ரவதை: பாஜக பிரமுகரின் செயலால் போலீஸார் அதிர்ச்சி

கர்நாடகாவில் சிக்கமளூரு மாவட்டத்தில் 15 நாட்களாக 16 பட்டியல் சமூகத்தினரை அறையில் பூட்டி வைத்து தாக்கியதாக பாஜக பிரமுகர் மற்றும் அவரது மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கவுடா. பாஜக பிரமுகரான இவர் ஹுசனேஹள்ளியில் காபி எஸ்டேட் வைத்துள்ளார். அவரும், அவரது மகன் திலக்கும் 15 நாட்களாக 16 பட்டியல் சமூகத்தினரை அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

காபி தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளிகளிடம் கொடுத்த பணத்தை ஜெகதீஷ் கவுடா கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திருப்பி தரமுடியாத நிலையில் தொழிலாளிகள் இருந்துள்ளனர். இதனால் தொழிலாளிகளை அவர் தாக்கியதால், வேலைப்புறக்கணிப்பு போராட்த்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 16 தொழிலாளர்களை ஒரே அறையில் பூட்டி வைத்து அடித்து பணம் கேட்டு ஜெகதீஷ் கவுடாவும், அவரது மகன் திலக்கும் சித்ரவதை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு மாத கர்ப்பிணியான அர்பிதா(20) என்ற தொழிலாளியின் கருக்கலைந்தது. இதைத் தட்டிக்கேட்ட அவரது கணவர் விஜய், தொழிலாளிகள் ரூபா, கவிதா ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த நிலையில், அர்பிதா நேந்று அளித்த புகாரின் பேரில் பாலேஹொன்னூர் காவல்துறையினர் அறையில் அடைக்கப்பட்டிருந்த 16 பேரையும் மீட்டனர். மேலும் அர்பிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெகதீஷ் கவுடா மற்றும் அவரது மகன் திலக் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ஜெகதீஷ் கவுடாவும், அவரது மகன் திலக்கும் தலைமறைவாகியுள்ளனர்.

இதுகுறித்து சிக்கமகளுரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உமா பிரசாத் கூறுகையில், "கவுடாவிடம் கடன் வாங்கிய சிலர் காபி தோட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். எனவே, மீதமுள்ளவர்களை அவர் அறையில் பூட்டியுள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிலையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் கூறுகையில்," கவுடா பாஜக ஆதரவாளர் தான். அவர் கட்சிக்காரர் இல்லை" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தன்னிடம் வேலை செய்யும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 16 பேரை 15 நாட்களாக பூட்டி வைத்து சித்ரவதை செய்தவரின் செயல் கிக்கமளூரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in