16 சர்ச், வீடுகளில் கொள்ளையடித்த பணத்தில் உல்லாசம்: பெண் தோழியுடன் வாலிபர் கைது

16 சர்ச், வீடுகளில் கொள்ளையடித்த பணத்தில் உல்லாசம்: பெண் தோழியுடன் வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 சர்ச், வீடுகளில் கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக பெண் தோழியுடன் செலவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி நள்ளிரவு மர்மநபர்கள் புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்கநகை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து குளச்சல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீஸார் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு குளச்சல் வெட்டுமடை பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் வந்தார். அவர் பின் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரிடமும் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் கருங்கல் அருகே கப்பியறை பகுதியைச் சேர்ந்த சாபுமோன் (37) என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் நூர்ஜகான் (43) என்பதும் தெரியவந்தது.

சாபுமோன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு பகுதியில் தற்போது வசித்து வந்துள்ளார். மேலும் சாபுமோன் வள்ளியூரில் 8 வருடங்களாக கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இந்த பண்ணையில் நூர்ஜகான் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பண்ணையருகே பிள்ளைகளுடன் தனி வீட்டில் வசித்தார். சாபுமோனுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இவர் மனைவியுடன் பண்ணையருகே வேறு தனி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நூர்ஜகான் - சாபுமோன் இடையே கடந்த சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாபுமோன், குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தலம் மற்றும் பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது. இதுபோல் இரணியல் போலீஸ் சரகத்தில் 7 திருட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 16 சர்ச், வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து குளச்சல் போலீஸார், சாபுமோன் மற்றும் நூர்ஜகான் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் சாபுமோன், நூர்ஜகானுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஜாலியாக சுற்றி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in