
மதுரை புறநகர் பகுதியில் ஏடிஎம் கார்டை மாற்றி நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.56 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் மற்றும் கூகுள் பே மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளில் நூதன முறைகளில் பண மோசடி நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், டிப் டாப் பேர்வழிகள் உதவுவது போல் நடித்து வங்கி, ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களில் அப்பாவித்தனமான ஆண்கள், பெண்களை ஏமாற்றி நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்வோரிடம் ஒருவர் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கடந்த வாரம் தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து இப்பகுதி ஏடிஎம் மையங்களை தீவிரமாக கண்காணித்தனர். திருமங்கலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் நின்ற ஒருவர், அங்கு பணம் எடுக்க வந்த ஒருவருக்கு உதவச் சென்றார். அந்நபரின் ஏடிஎம் கார்டை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக வேறொரு ஏடிஎம் கார்டு கொடுத்து, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்தார். அவர் நடவடிக்கைகளை கண்காணித்த எஸ்ஐ மாரி கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கையும், களவுமாக பிடித்தார். விசாரணையில் திருமங்கலம் பக்ருதீன்(47) என தெரிந்தது. அவரை கைது செய்து, அவர் வைத்திருந்த ரூ.1. 56 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.