சென்னையில் ஒரே நாளில் 15.5 லட்சம் அபராதம்: போக்குவரத்து போலீஸார் தீவிரம்

சென்னையில் ஒரே நாளில் 15.5 லட்சம் அபராதம்: போக்குவரத்து போலீஸார் தீவிரம்

புதிய மோட்டார் வாகனத் திருத்த சட்டத்தின் படி, சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 15.5 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராதத் தொகை விதிக்கும் நேற்று நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில் 2500 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து 15.5 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்றும், இன்றும் புதிய போக்குவரத்து அபராதம் குறித்து வாகன ஓட்டிகளிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு சிலருக்கு மட்டுமே அபராதம் விதித்து வருவதாகவும், நாளை முதல் தீவிரமாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் பெற இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இ-செலான் இயந்திரங்களில், இதுவரை 200 இயந்திரங்களில் மட்டுமே புதிய அபராதத் தொகை அப்டேட் செய்யப்பட்டு இருப்பதாகவும், நாளைக்குள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in