காணும் பொங்கல் அன்று சென்னையில் களமிறங்கும் 15,000 போலீஸார்: ட்ரோன், வாட்ஸ்அப் உங்களை கண்காணிக்கும்!

காணும் பொங்கல் அன்று சென்னையில் களமிறங்கும் 15,000 போலீஸார்: ட்ரோன், வாட்ஸ்அப் உங்களை கண்காணிக்கும்!

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை என மொத்த 15,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை (Temporary Mini Control room) அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் இதேபோல, உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ், மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இது தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 ட்ரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 2 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு. சமூக விரோதிகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும்.

மேலும், அதிக திறன் கொண்ட Heavy weight Drone Camera பயன்படுத்தப்பட்டு, கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும். சிறப்பம்சமாக 2 பெரிய அளவிலான திறன் மிகுந்த VTOL Drone கேமராக்கள் மீட்பு பணியில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு. ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு கையடக்க வான் தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டு அதன் வழியாக பொதுமக்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in