வாடிக்கையாளரின் ஆவணங்களைத் திருடி 1.50 லட்சம் மோசடி: சென்னையில் வங்கி ஊழியர் கைது

அபூபக்கர் சித்திக்(
அபூபக்கர் சித்திக்(

சென்னையில் வங்கி வாடிக்கையாளரின் ஆவணங்களைத் திருடி அதன் மூலம் வங்கியில் 1.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த எஸ்பிஐ வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சாலிகிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் தென்னரசு. தனியார் நிறுவன ஊழியரான இவர் சாலிகிராமத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் இவர் ஐசிஐசிஐ வங்கியில் கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது போலவும், அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்றிருப்பதாகவும், அதை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. தன்னிடம் கிரெடிட் கார்டு இல்லாத நிலையில், தன் பெயரில் வங்கிக் கடன் பெற்று இருப்பதாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து தென்னரசு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் வங்கிக்குச் சென்று முறையிட்டதுடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதன் பேரில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸார் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது கிரெடிட் கார்டு பெற்ற கணக்கிற்கு கொடுக்கப்பட்டிருந்த மற்றொரு செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியைத் தேடத் தொடங்கினர். அதனடிப்படையில் சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக்(37) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் எஸ்பிஐ வங்கியில் வேலை பார்த்து வருவதும், அதற்கு முன் சாலிகிராமத்தில் உள்ள ஐசிஐசிஐவங்கி கிளையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

அப்போது தனக்குக் கிடைத்த சிம்கார்டு ஒன்றை வைத்து அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த தென்னரசுவின் ஆவணங்களைத் திருடி, அவரது பெயரில் கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இதே போல் மேலும் சில வங்கி வாடிக்கையாளர் பெயரிலும் அபூபக்கர் சித்திக், கிரெடிட் கார்டு பெற்று பணமோசடி செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐவங்கி ஊழியர் அபூபக்கர் சித்திக் மீது பணமோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதுபோல எத்தனை பேரிடம் அவர் மோசடி செய்தார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in