50 ரூபாய்க்கு மூக்குத்தி, 1500 ரூபாய்க்கு 4 ஆடுகள்; என்ஜிஓக்களை குறிவைத்து 150 கோடி மோசடி: டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்

50 ரூபாய்க்கு மூக்குத்தி, 1500 ரூபாய்க்கு 4 ஆடுகள்; என்ஜிஓக்களை குறிவைத்து 150 கோடி மோசடி: டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்

என்ஜிஓக்களைக் குறிவைத்து 150 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டார் சேவா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை நிறுவனர் ஜெயராமன், மேலாளர் இளவரசி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் சில மாதங்க்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்களை அணுகி ஐம்பது ரூபாய்க்கு தங்க மூக்குத்தி, புடவை, 1,500 செலுத்தினால் வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 4 ஆடுகள், 10 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் பணம் கொடுத்த மூன்று மாதத்தில் திட்டத்திற்கான பொருட்கள் கிடைத்துவிடும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளது.

குறிப்பாக இந்த நிறுவனம் என்ஜிஓக்களை குறிவைத்து, இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் ஒரு நபருக்கு நூறு ரூபாய் வீதம் என்ஜிஓக்களின் உரிமையாளருக்கு வழங்கப்படும் எனவும், இதற்கான தனியாக மாத சம்பளம் 35 ஆயிரம் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு என்ஜிஓக்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும், மகளிர் குழுக்களையும் அணுகி இந்த திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்தனர். 50 ரூபாய்க்கு மூக்குத்தி கிடைப்பதால் பலரும் பணம் செலுத்தினர். அதே போல் 1,500 ரூபாய் செலுத்தினால் நான்கு ஆடுகள் கிடைக்கும் என்ற திட்டத்திலும், ஒரு லட்ச ரூபாய் வட்டி இல்லா கடனுக்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த என்ஜிஓக்கள் மூலம் செலுத்தியுள்ளனர்.

மேலும் ஸ்டார் சேவா பவுண்டேஷன் நிறுவனம் மூன்று மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் மட்டுமே என்ஜிஓக்களுக்கு கமிஷன் கிடைக்கும் என கூறியதால் ஒவ்வொரு என்ஜிஓக்களும் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் வரை இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

ஸ்டார் சேவா நிறுவனம் கொடுத்த மூன்று மாதம் முடிந்த நிலையில் முதற்கட்டமாக ஒவ்வொரு என்ஜிஓக்கள் மூலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூக்குத்தியை வழங்கியுள்ளனர். அந்த மூக்குத்திகளை வாங்கிய பொதுமக்கள் சோதனை செய்து பார்த்ததில் அத்தனையும் போலியான மூக்குத்திகள் என்பது தெரியவந்தது. இந்த மூன்று மாதத்திற்குள் என்ஜிஓக்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்ய வைத்த ஸ்டார் சேவா நிறுவனம் அலுவலகத்தை பூட்டிவிட்டு அதன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில், பணம் செலுத்திய பொதுமக்கள் அவரவர் பணம் செலுத்திய என்ஜிஓக்களைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு வருவதால் தமிழகம் முழுவதும் இருந்து என்ஜிஓக்கள் பலரும் டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர். குறிப்பாக இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை என புகார் அளித்திருப்பதாகவும் ஸ்டார் சேவா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜெயராமன், மேலாளர் இளவரசி, மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். எனவே, இந்த மோசடி குறித்து காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 150கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in