
மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு சுமார் 100 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து, நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது மோதியது. இதில் 15 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் சுஹாகியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய ரேவா காவல்துறை கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின், “பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக மத்தியப் பிரதேசத்தின் கட்னியில் இருந்து பேருந்தில் ஏறினார்கள். இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்