ஒரேநாளில் ஒன்றரை டன் குட்கா பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 5 அதிரடி கைது

வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்
வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியில் கடைகளில் விற்பனை செய்வதற்காக  பதுக்கி வைக்கப்பட்டிருந்த  1.50 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீஸார்,   தந்தை, மகன் உள்ளிட்ட  ஐந்து பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டி.ஐ.ஜி., கயல்விழி உத்தரவின் பேரில்  தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி மதுக்கூர் கடைவீதியில் நேற்று சோதனை செய்தபோது  மளிகைக் கடை ஒன்றில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.  அதில் சம்பந்தப்பட்ட  மதுக்கூர் கண்ணகி தெருவை சேர்ந்த மளிகை உரிமையாளரான முருகேசன் (55), அவரது மகன் கணேசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில்  பட்டுக்கோட்டை அருகே முள்ளூர் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40)  என்பவர் மொத்தமாக குட்காவை கொள்முதல் செய்து மதுக்கூர், பட்டுக்கோட்டை சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து  சிவக்குமாருக்கு சொந்தமான குடோனை ஆய்வு செய்த போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சரக்கு வாகனங்களில் இருந்த ஒரு டன் அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். 

இது சம்பந்தமாக ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர்  பெரமையன் (40), சிவக்குமாரின் உறவினர்களான கரிகாலன் (24), குணாளன் (21)  உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த லாரி மற்றும் சிறிய சரக்கு வாகனம்  இரண்டையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய  உரிமையாளர் சிவக்குமாரை  தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in