பெற்றோருக்கு நடந்த துயரம்... இரவில் வீட்டிற்கு வந்த மகள் அதிர்ச்சி: 140 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் எஸ்கேப்

பெற்றோருக்கு நடந்த துயரம்... இரவில் வீட்டிற்கு வந்த மகள் அதிர்ச்சி: 140 சவரன் நகையுடன் கொள்ளையர்கள் எஸ்கேப்

தென்காசி மாவட்டம், ஆவுடையனூர் கிராமத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து முதிய தம்பதிகளைக் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்து 140 பவுன் தங்கநகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், ஆவுடையனூர் சிதரம்பர நாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(88), இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி (82) தம்பதி இருவருமே ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், இருமகள்கள் உள்ளனர். இதில் மகன் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவர்களது மகள்களில் ஒருவரான ராணி வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலைசெய்து வருகிறார். இவர் பணி முடிந்து தினமும் வீட்டுக்குச் செல்லும்போது தன் வயோதிக தாய், தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம். வழக்கமாக ராணி இரவு 8 மணிக்கு இவர்கள் வீட்டிற்குச் செல்வார்.

இந்நிலையில் நேற்று மாலை வள்ளியூரில் உடன் பணிபுரியும் ஒருவர் ஓய்வு பெறுவதால் விருந்து உபசரணையும், பாராட்டு நிகழ்ச்சியும் இருந்தது. அதை முடித்துவிட்டு இரவு 10 மணிக்குத்தான் தன் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றார். வழக்கமாக ராணி வந்து காலிங் பெல் அழுத்திய பின்பே கதவு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று இரவு கதவு திறந்தே கிடந்தது. ராணி உள்ளே சென்று பார்த்தபோது அவரது அம்மா, அப்பா இருவரும் சேரில், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வாயிலும் துணி வைக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் ராணி பேசியதில் இருந்தே வீட்டுக்குள் பின்வாசல் வழியாக ஏறிக்குதித்த மூன்று பேர் கொண்ட குல்லா அணிந்த முகமூடிக் கும்பல், அவர்கள் வீட்டில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் பத்துலட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. வயதான இருவரும் பென்சன் வாங்குவதையும், மகள் ராணி நேற்று தாமதமாக வருவார் என்பதையும் கணித்த உள்ளூர் கும்பல் தான் இப்படி வீட்டுக்குள் இறங்கியிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in