போலீஸ் எனக்கூறி ஆந்திர நகை வியாபாரியிடம் 1.40 கோடி பறிப்பு: காரில் தப்பிய கும்பலுக்கு வலை

போலீஸ் எனக்கூறி ஆந்திர நகை வியாபாரியிடம் 1.40 கோடி பறிப்பு: காரில் தப்பிய கும்பலுக்கு வலை

சென்னையில் ஆந்திர நகை வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து 1.40 கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்த கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(45). இவர் ஆந்திராவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுப்பராவ் தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் தங்கநகை வாங்க 1.40 கோடி ரூபாய் பணத்துடன் தனியார் பேருந்தில் இன்று அதிகாலை சென்னை வால்டாக்ஸ் சாலையில் வந்து இறங்கினார்.

இதன் பின் அங்கிருந்த ஆட்டோவில் வீரப்பன் தெரு துரைசிங்கம் தெரு சந்திப்பிற்கு சென்றார். ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்துடன் அவர்கள் நடந்து சென்றனர். அப்போது காரில் லத்தி, மற்றும் கைவிலங்குடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஓன்று சுப்பாராவை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்றும், உங்களது உடமைகளை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் சுப்பாராவிடம் இருந்த 1.40 கோடி ரூபாயைப் பறித்துக்கொண்டு பணத்திற்கு உரிய ஆவணங்கள் கேட்டுள்ளனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆவணங்களை சமர்பித்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பாராவ், உடனே யானைக்கவுனி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பணத்துடன் தப்பிய போலி போலீஸ் கும்பலை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். வால்டாக்ஸ் சாலையில் நகைவியாபாரிகளிடம் போலீஸ் போல் நடித்து பணம் பறித்து செல்வது தொடர்கதையாகியுள்ளது என்று வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in