முஸ்லிம் பெண்களுக்கு மிரட்டல் விடுத்த பஜ்ரங் முனிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

முஸ்லிம் பெண்களுக்கு மிரட்டல் விடுத்த பஜ்ரங் முனிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டிய மஹந்த் பஜ்ரங் முனி தாஸுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 2-ல் சீதாபூரில் இந்துக்களின் ஒரு ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. அங்குள்ள மஹரிஷி ஸ்ரீலஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமத்தின் மடாதிபதியான மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் இதில் கலந்துகொண்டார். இந்த ஊர்வலம் சீதாபூரின் கைராபாத் பகுதியின் மசூதியைக் கடந்தபோது, மஹந்த் பஜ்ரங் முனி தனது வாகனத்தில் அமர்ந்தபடி, ‘கைராபாத்தில் ஒரு இந்து மதத்தின் பெண்ணாவது கேலி செய்யப்பட்டால், கைராபாத்தின் முஸ்லிம் மருமகள்களை அவர்களின் வீட்டிலிருந்து வெளியே இழுத்து பாலியல் பலாத்காரம் செய்வேன்’ என மிரட்டல் விடுத்தார்.

அவர் பேசும் காட்சி அடங்கிய காணொலி சமூகவலைதளங்களிலும் வைராலானது. இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், அவர்மீது வழக்குகள் பதிவுசெய்து கைதுசெய்ய ஏப்ரல் 8-ல் உத்தர பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, சீதாபூரின் வடக்கு பகுதி காவல் துறை துணை ஆணையர் ராஜீவ் தீட்ஷித் தலைமையில் உபி அரசால் விசாரணை அமைக்கப்பட்டது. இதன் முடிவில் துறவி பஜ்ரங் முனியின் குற்றம் நிரூபணமானது.

இதற்கிடையே இரண்டு நாட்களாக, சீதாபூரின் கண்ணாடி மசூதியின் முன் முஸ்லிம் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். இதில், ’பாஜக ஆட்சியின் துறவியாக முதல்வர் ஆதித்யநாத் இருக்கும் தைரியத்தில் இன்னொரு துறவியான பஜ்ரங் முனி, முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டியுள்ளார். எனவே, அவரைக் கைது செய்ய வேண்டும்.’ எனக் கோஷமிட்டனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதனால், சீதாபூரில் தனது மடத்தில் இருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறையின் சாதாரணக் கைதிகள் பிரிவில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தான் ஒரு மடாதிபதி எனக் கூறியதையும் நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை. அவருக்கு வீட்டு உணவும் மறுக்கப்பட்டு சாதாரணக் கைதிகளுக்கான உணவு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் கடும் கோபம் அடைந்த துறவி பஜ்ரங் முனியின் ஆதரவாளர்கள் நேற்று முதல் கலவரத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, சீதாபூரின் முஸ்லிம்கள் பகுதியான கைராபாத்தில் பதற்றம் நிலவுகிறது. கடைகள் மூடப்பட்டுள்ளன. இங்கு உத்தர பிரதேச சிறப்பு காவல் படையான பிஏசியினர் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இப்பிரச்சினையில், தான் கைதாவது உறுதி என அறிந்த பஜ்ரங் முனி, தான் கூறியது தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதில், எவர் மனது புண்பட்டிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in