13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்... பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சவால்கள் நிறைந்த உலகில் இந்தியாவின் குரல் வலுப்பெற்று வருகிறது என்று உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகரில் இன்று நடைபெற்ற விழாவில் கிராமப்புற மேம்பாடு, சாலை, மின்சாரம், பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் ரூ.4200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, "சமீபத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணி செய்து முடிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகி உள்ளது. இந்தியா வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் மகள்கள் நமது நாட்டுக்கு தலைமை வகிப்பார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில்கூட ஒருவரும் பட்டினியால் பாதிக்கப்படவில்லை என்ற நிலையை உருவாக்கினோம்.சவால்கள் நிறைந்த உலகில், இந்தியாவின் குரல் வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் திறனை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் அரசு அயராது உழைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த நூறாவது ஆண்டான 2047-ம் ஆண்டில் இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகி இருக்கும். அதை நோக்கியே பணியாற்றி வருகிறோம்" என்றார்

மேலும், “இன்று நமது தேசியக் கொடி பார்க்கும் இடமெல்லாம் உயரமாக பறந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டி உள்ளோம். சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்து சாதனை படைத்துள்ளோம். உலகில் எந்த நாடும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் 3 விண்கலம் சென்று தரையிறங்கியது.

விண்வெளியில் மட்டுமின்றி விளையாட்டிலும் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டு வியந்து வருகிறது. விளையாட்டுத் துறையிலும் இந்தியாவின் திறனை உலகம் இன்று வியந்து பார்க்கிறது. சமீபத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றதில் இந்தியா கடந்த கால சாதனைகளை முறியடித்தது” என்று பிரதமர் மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in