விஷக் காளானால் விபரீதம்: இரண்டு நாட்களில் 13 பேர் உயிரிழப்பு!

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

அசாமில் விஷக் காளான் உட்கொண்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 5 நாட்களில் அசாம் மாநிலத்தில் உள்ள சராய்தேவ், திப்ரூகர், சிவசாகர், தின்சுகியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேர், திப்ரூகர் நகரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அனைவருமே வீட்டில் சமைக்கப்பட்ட காளான் உணவை உட்கொண்டவர்கள். விஷக் காளான் என்பதால், அதை உட்கொண்டதும் குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு ஆகிய பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டன. மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், திங்கள் கிழமை 4 பேர் உயிரிழந்தனர். நேற்று (ஏப்.12) மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து என்டிடிவி ஊடகத்திடம் பேசிய அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பிரசந்தா திஹிங்கியா, “விஷக் காளான் உட்கொள்வதால் மக்கள் உடல்நலப் பாதிப்புக்குள்ளாவது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அவர்களுக்குக் காளான்களில் எது நல்லது எது விஷத்தன்மை கொண்டது என்பதை அடையாளம் காண முடிவதில்லை. விஷக் காளான்கள் காட்டுப் பகுதியில் வளரக்கூடியவை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in