1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மலைய மன்னனின் சிற்பம் மாரங்கியூர் கிராமத்தில் கண்டுபிடிப்பு!

மலைய மன்னரின் சிற்பம்
மலைய மன்னரின் சிற்பம்

விழுப்புரம் அருகே மாரங்கியூர் கிராமத்தில் உள்ள கோயிலில்  சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாணகப்பாடி நாட்டை  ஆண்ட மன்னர்  ஒருவரது சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மாரங்கியூர் கிராமத்தில் உள்ள  பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக் கோயிலின் புனரமைப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவர் மற்றும் சோழர் கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அப்பகுதியை சேர்ந்த   எழுத்தாளர்  கோ.செங்குட்டுவன் நேற்று நேரில் சென்று  கோயிலை  ஆய்வு செய்தார். 

அப்போது அங்குள்ள சுமார் 2 அடி உயரமுள்ள சிற்பம் ஒன்று அவரை ஈர்த்தது.   கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் காணப்படும் அந்தச் சிற்பம்  குறித்து கேட்டபோது அது அனுமன் சாமி சிலை என அங்குள்ளவர்கள் கூறியிருக்கின்றனர்.  ஆனால் இது மன்னர் எதிரிலி சோழ வாண குலராயன் என்பவரின்  சிற்பம் என்பதை செங்குட்டுவன் இறுதி செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  'கிளியூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் குலோத்துங்கச் சோழ சேதிராயர். இவரது மகன் எதிரிலி சோழ வாண குலராயன்.  வாணகப்பாடி நாட்டின் தலைவராக விளங்கியவர். இவர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இருக்கும் சிவாலயங்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்திருக்கிறார். 

அதன்படி மாரங்கியூரில் இருக்கும்  இந்த ஆலயத்திற்கு தனது ஆட்சிக் காலத்தில்  (கி.பி.1136) நிலங்களை தானமாக வழங்கி அவற்றிற்கு வரி விலக்கும் செய்திருக்கிறார்.  மேலும் அம்மனின் திருமேனியையும் நிறுவி இருக்கிறார். இத்தகவல்களை இக்கோயிலில் இருக்கும்  குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

இந்தக் காரணத்தினால்  இம்மன்னரான எதிரிலி சோழ வாண குலராயன்  உருவச் சிலை கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது.  தலையில் நீண்ட கேசம்.  காது, கழுத்து, கைகளில் அணிகலன்கள். இடுப்பில் வாள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தில் இருந்த மலைய மன்னர்களின் சிற்பங்களை இந்தச் சிற்பம் ஒத்திருக்கிறது. கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னரின் சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என கிராம மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது"  என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in