சென்னை மகள் வீட்டுக்கு சென்ற பெண் அதிகாரி; நெல்லை வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை: பொங்கல் அன்று கைவரிசை

பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை
பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை

திருநெல்வேலியில் சென்னைக்கு சென்றிருந்த நெடுஞ்சாலைத்துறையின் பெண் அதிகாரி வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 120 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள கனராவங்கி காலனியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி தேவி(58). பன்னீர் செல்வம் முன்பே இறந்துவிட்டார். தேவி நெல்லையில் நெடுஞ்சாலைத்துறையில் உதவிப் பொறியாளராக உள்ளார். தேவிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருமே இப்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.

பொங்கல் விடுமுறை என்பதால் தேவி அவர்களின் வீட்டுக்குச் சென்றிருந்தார். நேற்று மாலை தேவியின் வீடு வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் அவர் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அவருக்கு அழைத்துத் தெரிவித்தனர். தேவி பெருமாள்புரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டை உடைத்து 120 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. போலீஸார் மோப்பநாயுடன் சென்றனர். ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பொங்கலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in