அதிர்ச்சி... ஆறாம் வகுப்பு மாணவன் மாரடைப்பால் மரணம்! 20 வயதுகளில் 2 இளைஞர்களும் பலி!

மாரடைப்பு
மாரடைப்பு

குஜராத் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவன் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது தேசம் நெடுக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

குஜராத்தின் துவாரகாவில் வசித்து வந்த 12 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் இறந்தான். இதே போன்று இருபதுகளின் மத்தியில் உள்ள இருவர், ராஜ்கோட் பகுதியில் மாரடைப்பு காரணமாக இறந்தனர். இளம்வயது மாரடைப்புக்கு ஆளான இந்த 3 பேரின் உயிரிழப்பும் அதிர்ச்சியையும், பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

துஷ்யந்த் பிப்ரோதர் என்ற 12 வயது சிறுவன் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான். துவாரகாவின் பன்வாட் தாலுகாவின் விஜாப்பூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில் அதிகாலை மயங்கிய நிலையில் காணப்பட்டான். பேச்சு மூச்சின்றி தென்பட்ட சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பதை மருத்துவர் உறுதி செய்தார்.

மாரடைப்பு மரணத்துக்கும் கோவிட் தடுப்பூசிகளுக்கும் முடிச்சிட்டு விவாதங்கள் எழுந்து வருவதன் மத்தியில், துஷ்யந்தின் மரணமும் சர்ச்சைக்கு ஆளானது. ஆனால் அவனது தந்தை கன்ஷிராம், மகன் துஷ்யந்த் இன்னமும் கோவிட் தடுப்பூசி இதுவரை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

மாரடைப்பு
மாரடைப்பு

துஷ்யந்த் மரணம் நிகழ்ந்தது போன்றே, 20 சொச்ச வயதிலான 2 இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக இறந்துள்ளனர். ராஜ்கோட்டில் 23 வயதாகும் நிமித் சத்ரானி என்பவர் நானா மௌவா சாலையில் உள்ள மருந்தகம் அருகே நெஞ்சு வலிப்பதாக கூறிவிட்டு சரிந்து விழுந்தார். பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த மரணத்தை ராஜ்கோட் தாலுகா போலீஸாரும் உறுதி செய்துள்ளனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், 24 வயதாகும் ஜாஸ்மின் வகாசியா, கோகதாத் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் தொழிற்சாலையில் இறந்தார். அங்கு அவர் மேற்கொள்ளும் தினசரி பூஜையின்போது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in