ஒரே வீட்டில் சிக்கிய 12 டன் ரேசன் அரிசி: ரகசிய தகவலால் போலீஸ் அதிரடி

 ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஒரே வீட்டில் இருந்து 12 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ரேசன் கடைகளில் இருந்து மொத்தமாக அரிசியைக் கடத்தி சிலர் வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பெரியகுளம் தாசில்தார் காஷா ஷெரிப்பிற்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து தாசில்தார் காஷா ஷெரிப் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லெட்சுமணன் என்பவரது வீட்டில் ரேசன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாசில்தார் காஷா ஷெரிப் லெட்சுமணன் வீட்டிற்குள் அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது அங்கு 300 மூடைகளில் 12 டன் அளவுக்கு ரேசன் அரிசி இருந்தது. அப்போது தாசில்தார் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெரியகுளம் டி.எஸ்.பி கீதா தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ரேசன் கடை அரிசியை, ரைஸ் மில்களில் கொடுத்து பட்டை தீட்டி அரிசியாகவும், இட்லி மாவாகவும் விற்று வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 12 டன் அரிசியையும் பறிமுதல் செய்த போலீஸார் அருகில் உள்ள அரசு கிட்டங்கிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், அரிசியை வீட்டில் பதுக்கிவைத்திருந்த லெட்சுமணன், அவருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுநர் சத்தியநாராயணன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் நான்குபேரைத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in