
25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறி தமிழக போலீஸார் 12 பேரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை திருட்டு வழக்கில், பறிமுதல் செய்ய வேண்டி ராஜாஸ்தான் சென்ற திருச்சி போலீஸாரை லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்க வைத்துள்ளனர் வடமாநில தம்பதியினர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்தவர் சோனியாஈ பன்னாலால் தம்பதி. இவர்கள் நேற்று அந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் தமிழக போலீஸார் என கூறி 12 பேர் தங்களை மிரட்டி கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க 25 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அஜ்மீர் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட தம்பதி நேற்று தமிழக போலீஸாரிடம் 25 லட்ச ரூபாயை கொடுத்த போது அங்கு காத்திருந்த அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் 12 தமிழக போலீஸாரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் பிடிப்பட்ட தமிழக போலீஸாரை அழைத்து சென்று நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தில் 52 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருட்டு வழக்கு ஒன்றில், தலைமறைவாக இருந்து வரும் சோனியா மற்றும் அவரது கணவர் பன்னாலால் ஆகியோரை பிடிப்பதற்காக ஆய்வாளர் மோகன் தலைமையிலான 12 பேர் கொண்ட திருச்சி தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். அங்கு சோனியா மற்றும் பன்னாலால் ஆகியோரிடம் நகைளை மீட்பது குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தங்கத்தை விற்று செலவு செய்து விட்டதாக தெரிவித்ததால் நகைக்கு உண்டான பணத்தை (25 லட்ச ரூபாய்) உடனடியாக கொடுக்க வேண்டும் என கேட்டதாகவும் அவர்களும் பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அந்த தம்பதி தங்களை கைது செய்யாமல் இருக்க 25 லட்சம் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ராஜாஸ்தான் அஜ்மீர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழக போலீஸார் திருட்டு வழக்கில் நகைகளை மீட்க வந்துள்ளதாக கூறியதை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழக்கு குறித்தான ஆவணங்களை கேட்டு கடிதம் அனுப்பினர். அதனடிப்படையில் தமிழக காவல்துறை அனுப்பிய ஆவணங்களை வைத்து அம்மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிப்பட்ட தமிழக போலீஸார் உண்மையில் நகையை மீட்க வந்தார்களா? அல்லது அவர்கள் லஞ்சம் கேட்டது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தமிழக போலீஸார் உண்மையில் நகைகளை மீட்க வந்தது உறுதியாகும் பட்சத்தில் அவரை விடுவிக்க உள்ளதாக அஜ்மீர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகையை மீட்க சென்ற இடத்தில் லஞ்ச வழக்கில் தமிழக போலீஸார் 12 பேர் பிடிப்பட்ட சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.