வாட்ச்மேன் வீட்டுக்கு 12 லட்சம் மின் கட்டணம்: அலற விட்ட அதிகாரிகள்

வாட்ச்மேன் வீட்டுக்கு 12 லட்சம் மின் கட்டணம்: அலற விட்ட அதிகாரிகள்

புதுச்சேரியில் 800 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டிய வீட்டிற்கு 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டண பில் வந்ததால் இரவு நேர காவலர் அதிர்ச்சியடைந்தார்.

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை திருவள்ளூர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன்(57). டிவி மெக்கானிக்கான இவர், இரவுநேர காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக அவரது வீட்டிற்கு மின் கட்டணமாக மாதம் 800 ரூபாய் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக தனியார்மயத்தைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இரண்டு மாதமாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை.

புதுச்சேரி முழுவதும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து பில் வர மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மின் கட்டண ஊழியர்கள், சரவணன் வீட்டிற்கு வந்து மின் கட்டணமாக 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் கட்ட வேண்டும் என பில் கொடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், முத்தியால்பேட்டை மின் அலுவலகத்தில் சென்று முறையிட்டார்.

மீட்டர் ரீடிங் செய்யும் போது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்ந்து விட்டதாக மின் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.கடந்த முறை மீட்டர் 20630 இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21115 ஆக வந்துள்ளது. ஆனால், மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 211150 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டதால் சரவணனுக்கு 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in