எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 1-ம் தேதி, காசாக்குடிமேட்டைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீழகாசாகுடிமேடு பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும், அருகில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுமாக மொத்தம் 12 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 3-ம் தேதியன்று பிற்பகலில் வேதாரண்யம் அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையினரால் 12 பேரும் படகுடன் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அவர்களை ஜூலை எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் வழக்கம் போல் இந்திய அரசாங்கம் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நீதிமன்றக் காவல் முடிந்து இன்று மீண்டும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் 12 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இலங்கையின் பொருளாதார நிலைமையை கணக்கில் கொண்டு சிறையில் கைதிகள் வைக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் தவிர்த்து வருகிறது. அதனையடுத்தே இந்த மீனவர்கள் 12 பேரும் ஒருவார காலத்துக்குள்ளேயே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in