
பரமக்குடியில் சத்துணவு முட்டை சாப்பிட்டு மயங்கிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரம் அருகே சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு மாணவ, மாணவிகள் 240 பேர் தமிழ் வழி கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 207 பேர் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இன்று மதிய உணவுடன் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்பட்டது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் நலமுடன் உள்ளனர். ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 55 பேர் மதிய உணவு சாப்பிட்டனர்.
இதில் மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்தனர். தலைசுற்றலுடன் வாந்தி எடுத்த மாணவிகள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்து செல்லப்பட்டனர். மயங்கி விழுந்த மாணவிகள் 12 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவுடன் வழங்கிய முட்டை சரி வர வேக வைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இது குறித்து பரமக்குடி கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.