ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் புத்தாண்டு வழிபாட்டில் விபரீதம்: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் -கோப்பு படம்
ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் -கோப்பு படம்

புத்தாண்டு தரிசனத்துக்காக காஷ்மீர் காத்ராவில் இருக்கும் வைஷ்ணவி தேவி மாதா கோயிலில் கூடிய பக்தர்களில், நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் இறந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இன்று(ஜன.1) அதிகாலை புத்தாண்டு தரிசனத்துக்காக ஏராளமானோர் வைஷ்ணவி தேவி பவனில் திரண்டிருந்தனர். காஷ்மீர் மட்டுமன்றி டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூடியிருந்தனர்.

அவர்களில் இரு குழுக்கள் மத்தியில் முன்னகர்ந்து செல்வது தொடர்பாக வாக்குவாதம் முற்றியதாகவும், இதில் ஒருவரையொருவர் நெருக்கியடித்து விரைய முயன்றதில் விளைந்த பதட்டம் விபரீதமானதாகவும் தெரிகிறது. அதிகாலை 2.45 மணியளவில் இந்த தள்ளுமுள்ளுவிலிருந்து வெளியேற விரும்பியவர்களால் மேலும் அதிக எண்ணிகையில் பக்தர்கள் காயமடைந்ததாகவும் தெரிய வருகிறது.

காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 12 பேர் உயிரிழந்திருப்பதுடன், 14 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர். காயமடைந்தோரில் பலர் கவலைகிடமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரண நிதியும் அறிவித்துள்ளனர்.

அதன்படி காஷ்மீர் அரசு பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் அறிவித்துள்ளது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து பலியனோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பலியானவர்களில் ஒருவர் மட்டுமே காஷ்மீரை சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் அனைவரும் அருகமை மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. கூட்ட நெரிசல் தொடர்பாக காஷ்மீர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in