கேபிள் வயரால் அடித்து சித்ரவதை: சென்னை மதரஸா பள்ளியில் படித்த பிஹாரைச் சேர்ந்த 12 குழந்தைகள் மீட்பு

கேபிள் வயரால் அடித்து சித்ரவதை: சென்னை மதரஸா பள்ளியில் படித்த பிஹாரைச்  சேர்ந்த 12 குழந்தைகள் மீட்பு

சென்னையில் மதரஸா பள்ளியில் தங்கி படித்த பிஹார் மாநில குழந்தைகளை கேபிள் வயரால் அடித்து சித்ரவதை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இப்பள்ளியில் இருந்து 12 குழந்தைகளை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் மதரஸா பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனை பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் நிர்வகித்து வருகிறார். இந்த பள்ளியில் பிஹாரைச் சேர்ந்த 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மாதவரம் போலீஸார் உதவியோடு அந்த பள்ளிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் சில குழந்தைகளின் உடலில் ரத்தக்காய தழும்புகள் இருந்ததால் எழும்பூர் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பெற்றோர்கள் வரும் வரை குழந்தைகளை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரியிடம் புகார் பெற்று பள்ளி நிர்வாகி அக்தரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in