13 நாளில் வீணான 1.14 கோடி; மெரினாவில் உடைந்துபோன சிறப்புப் பாதை: மாற்றுத்திறனாளிகள் வேதனை

13 நாளில் வீணான 1.14 கோடி; மெரினாவில் உடைந்துபோன சிறப்புப் பாதை: மாற்றுத்திறனாளிகள் வேதனை

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பாதை உடைந்துபோனது. மேன்டூஸ் புயலால் உடைந்து போனதால் 1.14 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் சிறப்புப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் 1.14 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சிறப்புப் பாதை கடந்த நவம்பர் 27-ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், மேன்டூஸ் புயல் சின்னம் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) ராஜேந்திரன் கூறுகையில், "சென்னை மெரினா கடற்கரை 260 மீட்டர் நீளமான கடற்கரையாகும். ஆமைகள் கடல் பரப்பிற்கு வந்து முட்டை போட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இதன் காரணமாக சிமென்ட், கான்கீரிட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை எழுப்ப முடியாது. நாங்கள் இதை அமைக்கும்போது 20 மீட்டருக்கு தள்ளிதான் கடல் இருந்தது. தற்போது புயல் காரணமாக தண்ணீர் இந்தக் கட்டுமானத்திற்கு கீழ் உள்ள மண்ணை கரைத்துவிட்டது. இதில் கடல் பரப்பிற்கு அருகில் உள்ள வியூ பாயின்ட்தான் சேதம் அடைந்துள்ளது. மரப்பலகைகள் அனைத்தும் நல்ல நிலையில்தான் உள்ளன. ஆணிகள் பெயர்ந்துவிட்ட காரணத்தால் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது.

இயற்கை சீற்றங்களின்போது பெரிய கட்டுமானங்களே சேதம் அடைந்துள்ளது. இது வெறும் மரம்தான். இந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை வைத்து இந்தக் கட்டுமானம் மீண்டும் சீரமைக்கப்படும். தேவைப்பட்டால் 10 மீட்டர் பின்னே தள்ளி அந்தப் பகுதியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் அந்தக் கட்டுமானம் சேதம் அடையும். ஆனால், பலகைகள் சேதம் அடையாது. ஆணிகள் அடித்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்" என்றார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்நாதன், "சென்னை மெரினாவில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளி நடைபாதை சேதம் என்ற செய்தி உள்ளபடியே பாதிக்கிறது. வார்த்தைகள் இல்லை! முதல்வர் ஐயா இதை இன்னும் வலுவாக சரி செய்து தாருங்கள்! பிளீஸ் பிளீஸ்!" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் புயலே வரலை. அதுக்குள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை காலியாகிவிட்டது. அவ்வளவு சூப்பர் டிசைன். அவ்வளவு சூப்பர் டெண்டர் வேலை. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in