1,107 டவுன் பஸ் கொள்முதலுக்கு தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

1,107 டவுன் பஸ் கொள்முதலுக்கு தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய 1,107 நகர பேருந்துகள் உள்பட 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு பதில் 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது சட்டவிரோதமானது எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்துக்கு முரணாக இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோல பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியபோது அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சட்டப்படி பேருந்துகளை கொள்முதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 900 மில்லிமீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாது என்பதால், ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in