110 நாடுகள் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுள்ளன: மத்திய அரசு அறிவிப்பு

110 நாடுகள் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுள்ளன: மத்திய அரசு அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பு, கரோனாவை கட்டுப்படுத்த அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசிகளில், இந்தியாவின் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் வழங்கப்படும் கரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்க 110 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. நேற்றை முன்தினம்வரை (நவ.17) 114 கோடி தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள், அயல் நாடுகளுக்குப் பயணம் செல்ல உள்ள தடைகளை அகற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கல்வி, சுற்றுலா உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் வழங்கப்படும் சான்றிதழை ஏற்பது தொடர்பாக, பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்தியா வழங்கும் கரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொள்ள 110 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இதையொட்டி பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டு இந்தியாவுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கும் 110 நாடுகளுக்கு, இந்தியர்கள் செல்லும்பட்சத்தில் அவர்கள் 14 நாட்கள்வரை சுயகண்காணிப்புக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு டோஸ் மட்டுமே செலுத்திக் கொண்டவர் அல்லது இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்குள் வரும்பட்சத்தில் கரோனா சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு வீட்டுத் தனிமையை 7 நாட்கள்வரை கடைபிடிக்க வேண்டும். இந்தியாவுக்குள் வந்து 8-வது நாளன்று மீண்டும் கரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும். சோதனை முடிவு நெகட்டிவாக இருந்தாலும் அடுத்த 7 நாட்கள்வரை சுயகண்காணிப்புக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், ஈரான் உட்பட 110 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பிற நாடுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in