106 மணி நேர போராட்டம்... துணிச்சலான ராகுல்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் நள்ளிரவில் உயிருடன் மீட்பு!

106 மணி நேர போராட்டம்... துணிச்சலான ராகுல்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் நள்ளிரவில் உயிருடன் மீட்பு!

சத்தீஸ்கரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன், 106 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். அந்த சிறுவனுக்கு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தின் பிஹ்ரிட் கிராமத்தில், கடந்த ஜூன் 10-ம் தேதி வீட்டின் பின்புறமுள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் ராகுல் சாஹு தவறி விழுந்தான். கடந்த 5 நாட்களாக இரவும், பகலுமாக தொடர்ந்த மீட்புப்பணியில், 106 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்கிழமை நள்ளிரவில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுவன் பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். "அவர் தற்போது சிறப்பு மருத்துவர்கள் குழுவின் மேற்பார்வையின் கீழ் ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளார்" என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்துள்ளார். மேலும், “உங்கள் எல்லாருடைய பிரார்த்தனைகளாலும் நமது துணிச்சலான ராகுல் தற்போது திறமையான கைகளில் இருக்கிறார்” என்றும் கூறினார்.

இந்த மீட்புப் பணியை இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன. மீட்புப் பணியில் சுமார் 500 பணியாளர்களும், 150 அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறுவன் மீட்கப்பட்ட பின்னர் பேசிய ஜான்ஜிர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, "நாங்கள் வென்றோம், எங்கள் அணி வென்றது. இது ஒரு சவாலான சூழ்நிலை. நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வந்தார். ராகுலை தற்போது நேரடியாக பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in