அந்தர் பல்டி அடித்தது அண்ணா பல்கலைக்கழகம்!

துணை வேந்தர் வேல்ராஜ்
துணை வேந்தர் வேல்ராஜ்

தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் நீக்கம் என்ற அறிவிப்பிற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ’’ அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 உறுப்பு கல்லூரிகள் உள்ளது. அதில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள துறைகளில்,10 க்கும் குறைவாக எந்தெந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்கிறது என்பதை கமிட்டியின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டது.

மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள பாடபிரிவுகளை நீக்கிவிட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்டு வருவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. ஆட்சி மன்ற குழுவிலும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் 11 கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் இந்த கல்வியாண்டில் தற்காலிகமாக நீக்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ் வழி கல்வியை அண்ணா பல்கலைக்கழகம் நீக்குவதாக தவறாக பார்க்கப்படுகிறது. நாங்கள் வெளியிட்ட அந்த அறிவிப்பை திரும்ப பெறுகிறோம்.

உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு எவ்வித பாடப்பிரிவுகளையும் நீக்க மாட்டோம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை திரும்ப பெறுகிறோம். மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகளில் பயில்வதில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் மட்டுமே தமிழ் வழி கல்வி இருக்கிறது. தற்போது 500 பொறியியல் துறை சார்ந்த பாடப் புத்தகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பாடங்களில் அடுத்த கல்வி ஆண்டில் தமிழ் வழியில் மாணவர்கள் பயில ஏற்பாடு செய்யப்படும் ‘’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in