சூறைக்காற்று, கனமழையினால் பழுதாகிய படகு: நடுக்கடலில் தத்தளிக்கும் 11 குமரி மீனவர்கள்!

படகு
படகு

நடுக்கடலில் படகு பழுதாகி குமரி மீனவர்கள் 11 பேர் கரை திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். அரசு இவர்களை மீட்டுவர வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடிவரை 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவருகின்றனர். ஆனால் குமரியில் கடந்த இருதினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்து இருந்தது. இதனால் பலரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் மீன் வளத்துறை மூலம், இந்த அறிவிப்பு கடலோர கிராமங்களுக்குச் செல்வதற்கும் முன்பே ஏற்கெனவே சில மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.

குமரிமாவட்டம், வள்ளவிளை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிரில். இவரது மகன் விர்ஜினுக்கு சொந்தமான ‘குயின் ஆப் வேளாங்கண்ணி’’ என்னும் விசைப்படகில் படகின் உரிமையாளர் விர்ஜின் உள்பட 11 பேர் கேரள மாநிலம், கொச்சின் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன் தினமே இந்தப் படகு பழுதாகி விட்டது. சூறைக்காற்று, கனமழையினால் அந்த வழியாக வேறு மீனவர்களும் செல்லவில்லை. இதனால் சக மீனவர்களின் உதவியோடும் அவர்கள் கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர்.

இவ்விசயம் இவர்களது குடும்பத்தினர் மூலம் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஐஸ்டின் ஆண்டனிக்கு தெரியவந்தது. அவர் இதுகுறித்து கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலோர காவல் குழுமம், தமிழக மீன்வளத்துறை இயக்குனர், குமரி ஆட்சியர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in