பிஹாரில் கள்ளச்சாராயம் அருந்திய 11 பேர் உயிரிழப்பு: மதுவிலக்கு மாநிலத்தில் அதிகரிக்கும் மரணங்கள்!

பிஹாரில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயம்
பிஹாரில் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயம்கோப்புப் படம்

மதுவிலக்கு அமலில் இருக்கும் பிஹார் மாநிலத்தின் சாரண் மாவட்டத்தில் 11 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 12 பேர் உயிருக்குப் போராடிவருகின்றனர். பலர் பார்வை இழந்திருக்கின்றனர்.

பண்டிகைக் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 4-ம் தேதி, முதல் சாரண் மாவட்டத்தின் மாகெர் காவல் சரகத்துக்குட்பட்ட புல்வார்சியா பஞ்சாயத்து பகுதியின் கீழ் வரும் கிராமங்களைச் சேர்ந்த இருவர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. ஷ்ரவண் மாதத்தில் (ஆவணி) கொண்டாடப்படும் ‘நாக பஞ்சமி’ பண்டிகைக் கொண்டாட்டத்தை ஒட்டி, கிராமத்து மக்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு கள்ளச்சாராயத்தைப் பருகியிருக்கின்றனர். அதில் விஷத்தன்மை கொண்ட பொருள் இருந்ததால் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறை, கலால் துறை, சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு சென்று, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு சாதர் மருத்துவமனையில் சேர்ந்தனர். உடல்நிலை மோசமடைந்தவர்கள் பட்னாவில் உள்ள பிஎம்சிஹெச் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சிலர் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 9 பேர் நேற்று மரணமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒருவரும் மரணமடைந்தார். இன்னொருவர் மரணமடைந்த நிலையில் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவர் தகனம் செய்யப்பட்டுவிட்டார்.

5 பேர் கைது

கள்ளச்சாராயம் தயாரித்ததாக 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது.

2016 ஏப்ரல் 16 முதல் மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கிறது நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு. ஆரம்பத்தில் பாராட்டப்பட்ட இந்த முயற்சி போகப்போக கடும் விமர்சனத்துக்குள்ளானது. காரணம், சட்டவிரோத மது கடத்தல், கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை எனப் பல்வேறு குற்றங்களும் கள்ளச்சாராய மரணங்களும் தொடர்ந்து நடப்பதுதான். 2021 நவம்பர் முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in