கை நரம்பை அறுத்துக்கொண்டு பள்ளியில் ஓடிய மாணவி: 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: அதிர்ச்சி காரணம்

கை நரம்பை அறுத்துக்கொண்டு பள்ளியில் ஓடிய மாணவி: 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: அதிர்ச்சி காரணம்

தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை என்று பயந்த பத்தாம் வகுப்பு மாணவி, கை நரம்பை அறுத்துக் கொண்டு, பள்ளியின் இரண்டாம் தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இன்று சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த மாணவி தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, பயத்தில் இருந்த மாணவி முதலில் பள்ளி கழிவறைக்குள் சென்று தனது கை நரம்பை அறுத்துள்ளார்.

அதைப் பார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் கூறச் சென்றுள்ளனர். அந்த தருணத்தில் அங்கிருந்து ஓடி வந்த மாணவி, பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து குதித்துள்ளார். இதில், அவரது காலில் எலும்பு முறிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

உடனடியாக மாணவியை மீட்ட ஆசிரியர்கள் திருப்புவணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவி இரண்டாம் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in