`நீயாவது படித்து முன்னுக்கு வா, ஊர் சுற்றாதே'- தந்தை கண்டித்ததால் உயிரை மாய்த்த 10-ம் வகுப்பு மாணவன்

`நீயாவது படித்து முன்னுக்கு வா, ஊர் சுற்றாதே'- தந்தை கண்டித்ததால் உயிரை மாய்த்த 10-ம் வகுப்பு மாணவன்
Updated on
1 min read

நன்றாகப் படிக்கவேண்டும் என தந்தை சொன்னதால், 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை சித்தாலப்பாக்கம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுதிப் (15) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மனைவி கோபித்துக்கொண்டு தாயாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து முருகனும் அவரது மகன் சுதிப் மட்டுமே வீட்டில் தனியாக இருந்து வந்தனர். பின்னர் முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் வீட்டிலேயே படுத்து கிடந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற சுதிப் மாலை வீட்டுக்கு வந்தபோது அவரது தந்தை முருகன், ’நான்தான் சரியாக படிக்காததால் சாலையோர பரோட்டா கடையில் வேலை செய்கிறேன். நீயாவது படித்து முன்னுக்கு வா, ஊர் சுற்றாதே’ என அறிவுரை கூறி கண்டித்தார்.

இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவன் சுதீப் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த முருகன் வீட்டினுள் சென்று பார்த்தபோது சுதிப் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை அறிவுரை கூறியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in